Tuesday, November 25, 2014

இறைவன் உங்கள் மீது சுமத்தியுள்ள நிபந்தனைகள்


(நபியே! இவர்களிடம்) கூறும்: 
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது சுமத்தியுள்ள நிபந்தனைகள் எவை என்பதை நான் கூறுகின்றேன். 
(அதாவது) அவனோடு யாரையும் எதையும் இணை வைக்காதீர்கள். 
மேலும், பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
மேலும், வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.
நாமே உங்களுக்கும் உணவளிக்கின்றோம்; அவர்களுக்கும் அளிப்போம். 
மேலும், மானக்கேடான செயல்களின் அருகேகூடச் செல்லாதீர்கள்! அவை வெளிப்படையானவையாயினும் மறைவானவையாயினும் சரியே! 
மேலும் அல்லாஹ் கண்ணியத்திற்கு உரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்! நீங்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காக இவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான். 
மேலும், அநாதைகளின் செல்வத்தை அவர்கள் பருவ வயதினை அடையும்வரை நியாயமான முறையில் அன்றி நெருங்காதீர்கள்! 
மேலும், அளவையிலும், நிறுவையிலும் நீதியைக் கடைப்பிடியுங்கள். 
எந்த மனிதன் மீதும் அவனது சக்திக்கு ஏற்பவே தவிர நாம் பொறுப்பு சுமத்துவதில்லை. 
இன்னும் பேசும்போது நீதியுடன் பேசுங்கள்! உங்கள் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே! 
மேலும் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள்! நீங்கள் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காக இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நல்லுரை கூறுகின்றான்.  
மேலும், அவன் அறிவுறுத்துகின்றான்: 
நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். 
எனவே, நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். வேறு வழிகளைப் பின்பற்றாதீர்கள்! ஏனெனில் அவை நேரான வழியிலிருந்து உங்களைச் சிதறடித்துவிடும். உங்களுடைய இறைவன் உங்களுக்கு நல்கியுள்ள அறிவுரைகள் இவைதாம். இவற்றின் மூலம் நீங்கள் தவறான வழியைத் தவிர்த்து வாழக்கூடும். 
Al Quraan 6: 151, 152, 153

No comments:

Post a Comment